Monday, December 27, 2010

பெய்யென பெய்யும் மழை - வைரமுத்து

பத்து வருடத்துக்கு முன் வெளிவந்த வைரமுத்துவின் "பெய்யென பெய்யும் மழை" புத்தகத்தை நேற்று தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..240 பக்கம் கொண்ட புத்தகத்தை நேற்று நான் படித்து முடிக்கும் போது நேரம் 1.15am.. மிகவும் அருமையான கவிதைகளின் தொகுப்பு..படிக்க..படிக்க.. என்னுடைய தாகம் தீரவில்லை..
அதை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. நான் 
வைரமுத்துவின் ரசிகன் என்பதையும் நினைவில் கொள்க..

கல்லூரி விடுமுறையில் இருப்பதால் வீட்டில் ரொம்ப Bore அடிக்கிறது என்று அப்பாவின் நண்பரிடம் கூறியபோது அவர் இந்த புத்தகத்தை தந்தார்..
இந்த புத்தகத்தை பற்றிய கலைஞரின் விமர்சனத்தை படித்து உள்ளேன்..அன்று முதல் இதை படிக்க வேண்டும் என்ற "அவா" ஏற்பட்டது .அது நேற்று 
நிறைவேறியது.

வைரமுத்து - தமிழ்க்கடலில் கிடைத்த ஒரு அரிய முத்து..அது எனக்கு நேற்றும் உறுதிபடுத்தப்பட்டது .



பக்கங்களை புரட்டுவோமா.. 

விவசாயிகளின் துயரத்தை வடித்து இருக்கும் வைரமுத்து..

"ஊரெல்லாம் தேடி 
ஏர் மாடு இல்லாட்டி
 இருக்கவே இருக்கா 
இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி "

"ஏர் பிடிக்கும் சாதிக்கு 
இதுவே தான்  தலையெழுத்தா ?
விதி முடிஞ்ச ஆளுக்கே 
விவசாயம் எழுதி இருக்கா ?? "

என்று தன்னுடைய மண்வாசனை வார்த்தைகள் மாறாமல் வடித்து உள்ளார்.

"மௌனத்தில் புதைந்த கவிதைகள் " என்னும் தலைப்பில் காதலால் அவஸ்தை படும் பெண் கூறுவது போல் 

"காச நோய் காரிகளும் 
கண்ணுறங்கும் வேலையில 
ஆச நோய் வந்த மக 
அரை நிமிஷம் தூங்கலையே "

"ஏழை பொம்பளைக எதுவும் சொல்ல முடியாது 
ரப்பர் வளைவிக்கு சத்தமிட வாயேது "

என்ன ஒரு உவமை "ரப்பர் வளைவிக்கு சத்தமிட வாயேது" !!!

"காலமே என்னை காப்பாற்று " என்னும் தலைப்பில்  ரசனை போங்க ஒரு கவிதை..

"அதிகாலை கனவு கலைக்கும் அலாரத்திடம்    இருந்தும் ..

எல்லோரும் கதறி அழ 
எனக்கு மட்டும் கண்ணீர் வராத 
எழவு வீட்டில் இருந்தும்..

காலமே என்னை காப்பாற்று.."


என்று அது நீள்கிறது ...அத்தனையும் ரசனையின் உச்சம்!!

வாழ்வதற்கு விலையாக தன் உடலை விற்ற பெண்ணிடம் வைரமுத்து நேர்காணல் காண்கிறார்!!

  • உட்கார் ..பெயர் சொல் பெண்ணே ..
அப்பா அம்மா சூட்டியது  "மகாலட்சுமி "
மாமா சூட்டியது "சுகப்ரியா"

என அந்த நேர்காணல் நீள்கிறது..

  • உன் போன்றோர் தோன்ற காரணம் ?
செல்வத்தின் எச்சமும் ..வறுமையின் உச்சமும்..

  • இரைப்பை நிரப்பவா கருப்பையை பட்டினி இட்டாய்?
சில உறுப்புக்கள் அனாவசியம் 
குடல் வாழ்,இரண்டாம் கிட்னி , ஆறாம் விரல் 
எனக்கு கருப்பை 

  • எதுவரைக்கும் இந்த தொழில்??
திருமணம் - எய்ட்ஸ் 
இரண்டிலொன்று முந்தும் வரை 

இன்னும் பல..நெஞ்சை உலுக்கும் கவிதை அது..

"பூக்களும் காயம் செய்யும் " என்னும் தலைப்பில் ...

அவர் தன் காதலியை பார்த்து உரைப்பது போல்..

"தூக்கு கைதியின் கடைசி ஆசை போல் 

ஏன் பிரியும் போது பிரியம் உரைத்தாய் "

என நீளும் அந்த கவிதையில் ..

"உன் காதலறிந்த கணத்தில் 
என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கி பிரிந்த வேலை
என் இரவு நடுங்கியது "

"பிரிவை  தயாரித்து கொண்டு தானே 
காதலை உரைத்தாய்" 

ஒரு காதலனின் வலி வார்த்தைகளை கவிதை ஆக்கி உள்ளார் கவிப்பேரரசு !!!

இது  முதல் 150 பக்கங்களின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளனவை தான்..

இன்னும் திருப்ப வேண்டிய பக்கங்கள் நிறைய ..

இந்த மதிப்புரை "பெய்யன பெய்யும் மழை" பெருங்கடலில் ஒரு சின்ன முத்து. இன்னும் நிறைய முத்துகள் வைரமுத்துவால் ஒளி ஊட்டபட்டுள்ளன ..

வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள்..மனம் உங்களை அறியாமல் உருகும்!!

அருமையான தொகுப்பு !!
அற்புதமான படைப்பு !!